Rameshwaram

Welcome to Sethu Boomi..!

சேது பூமி

RAMESWARAM
வால்மீகி சொல்ல மறந்த கதை. . .

CHEMISTRY படித்த எல்லோருக்கும் தெரியும் தண்ணீர் எல்லாக் கடலிலும் ஒன்றுதான் என்று. என்ன சாக்கடல் மாதிரி சில கடல்களில் உப்பின் அடர்த்தி கொஞ்சம் அதிகம் இருக்கும், ந்திகள் கலக்கக் கூடிய முகத்துவாரப் பகுதிகளில் கொஞ்சம் கம்மியாக இருக்கும்.
மற்றபடி அட்லாண்டிக் கடல் என்றாலும் NaCl தான், இந்து மாக் கடல் என்றாலும் அதே NaCl தான். எனவே நான் படித்த வேதியியல் பிரகாரம் பார்த்தால் எங்கே குளித்தாலும் உப்புத் தண்ணீர், உப்புத் தண்ணீர்தான், வேண்டுமானால் சோடியம் குளோரைடோடு கொஞ்[ம் பொட்டாசியம் அயோடைடு கலந்திருக்கலாம்.

கதை இப்படி இருக்க இராமேச்வர அக்கினிதீர்த்தக் கடலில் மட்டும் அப்படி
பெருசா என்ன வாழுதாம்? – இப்படித்தான் நானும் நினைத்தேன் குருமுகமாக அது தெரியும் வரை.

சரியான விளக்கம் கிடைக்காத வரை, அல்லது விஞ்ஞானம் அதைச் சரியாக விளக்காத வரை, நமது இந்து தர்ம்ம், மற்றவர்கள் பார்வையை விட்டுத் தள்ளுங்கள், நம்மவர்கள் பார்வையிலேயே ஒரு மூட நம்பிக்கையின் மூட்டையாகவே இருந்து வந்திருக்கிறது. மேற்கத்திய கல்வியில் ஏற்பட்ட வெறி நம்மவர்களை தங்கள் நிஜ சொரூபத்தை மறந்து விட்டு பேயாய்ப் பிசாசாய் அலைய வைக்கிறது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. நாட்டமும் இல்லை. அடுத்த தலைமுறைக்கு அதைச் சொல்ல வேண்டும் என்ற அக்கறையும் இல்லை.

நம்மவர்களும் சரியாகச் சொல்லத் தெரியாமல், அது அப்படித்தான், நம் தாத்தா அப்படித்தான் செய்தார், அவர் தாத்தாவுக்குத் தாத்தாவும் அப்படியே. மூத்தவர் சொல்லில் காரணம் இருக்கும். ஏன் என்று கேளாதே ஏற்றுக் கொள் என்று சொல்லும் போது எகிறுகிறது இளைய தலைமுறை.

இப்படித்தான் இந்த இராமேச்வரக் கடலும். ஏதோ விஞ்ஞான பூர்வமாக விளக்குகிறேன் என்று சொல்லி ஒரு இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குமுன் இராமேச்வரக் கோவிலிலே இராமர் சீதையோடு பெரிய பெரிய படம் போட்டு விளக்கவுரைஎல்லாம் போட்டிருந்தார்கள்.

வெப்ப நிரோட்டம் அந்தப் பக்கம், குளிர்ந்த நீரோட்டம் இத்தப் பக்கம். இரண்டும் இங்கே அக்கினி தீர்த்தத்தில் கலக்கும் போது சும்மா அப்படியே உடம்பில் உள்ள அவ்வளவு நோக்காடுகளும், பிணிகளும் பீடைகளும், சகலவித பாவங்களும் புஸ்என்று காணாப் போவதுபோல் புருடா விட்டிருந்தார்கள். விட்டது அதுதான் என்று அவர்களுக்கே தெரிந்து விட்டது போலிருக்கிறது, அவர்களை அந்த Sign Boardகளைக் கழட்டி விட்டார்கள். இப்போதெல்லாம் இராமேச்வரக் கோவிலின் கிழக்குப் பிரகாரம் அந்த மாப் பெரிய போர்டுகள் இன்றி உச்சி எல்லாம் வெறிச் என்று காணப் படுகிறது.

நிஜம்தான் என்ன ? அட்லாண்டிக் கடலில் குளித்தால் போகாத பாவம்,
அரபிக் கடலில் குளித்தால் தீராத வினை, பசிபிக் கடலில் குளித்தால் பறக்காத நோவு, அப்படி என்ன, இங்கே இராமேச்வரம் அக்கினி தீர்த்த வங்கக் கடலில்
நீராடினால் போகிறது? யோசித்துப் பார்த்தால் கடல்களுக்குப் பெயர்கள் தனித்தனியாக நாமாக வைத்துக் கொண்டதுதானே தவிர எல்லாம் ஒன்றுதானே, எல்லாம் ஒரே நீர்ப்பரப்புதானே ( ஒருசில நிலந்தால் சூழப்பட்ட கடல்களைத் தவிர). கடல்களுக்கு இடையில் கோட்டைச் சுவர் கட்டியா தனித்தனியாகப் பிரித்திருக்கிறது, இல்லையே.?

அப்படி இருக்கும் போது இராமேச்வரக் கடலுக்கு மட்டும் அப்படி என்ன மகிமை? இதி நிஜமா, என்றால் அப்பட்டமான நிஜம், யுகம் யுகமாக தொடர்ந்து வரும் நிஜம், எத்தனையோ பேர்களுக்கு நிரூபணம் ஆகிவரும் நிஜம்.

நானே உணர்ந்திருக்கிறேன், உணர்த்துவிக்கப் பட்டும் இருக்கிறேன். நம் இந்து தர்மக் கோவில்களிலும் தலங்களிலும் மனிதனைத் தூய்மைப் படுத்துவன இரண்டு. ஒன்று மூர்த்தம். இன்னொன்று தீர்த்தம்.

அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள், மற்றவர்கள் நமக்குச் செய்த வினைகள், தெரியாமல் செய்த சின்னச் சின்ன தப்புகள், தீராப் பிணிகள், நோக்காடுகள் அனைத்துக்கும் என்னப்பன் நடத்தரையன் காட்டும் ஒரேதீர்வு, போ போ கடைசியில் அங்கே போய் நீராடி வா என இராமேச் வர அக்கினி தீர்த்தக் கடலைக் காட்டுவதுதான்.

ஏன, ஆண்டுக்கு இரண்டு மூன்று முறை நடக்கும் எங்கள் தில்லைப் பயணமே நிறைவு பெறு்வது இந்த சேது பூமியின் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி விட்டுத்தான்.

உடலும் உள்ளமும் சுத்திகரிக்கப் படும் வரை இது தொடரும்.

இது இராமாயணத்தில் வால்மீகி சொல்லாமல் விட்ட கதை அல்லது சொல்ல மறந்த கதை. கதையை நடத்திச் செல்லும் ஆசிரியனுக்கு, கதை ஓட்டம் முக்கியம், இலக்கும் குறிக்கோளும் அதைவிட முக்கியம்

அதைத்தான் குறி வைத்து அவன் அதை நடத்திச் செல்லுகிறான். இராமாயணத்தைப் பொருத்த மட்டில் இராவண வதம் முக்கியம்.

கதை அதை நோக்கித்தான் செல்லுமே அல்லாமல் இராம்பிரான் பஞ்சவடி ஆலமரத்தில் விழுது கொண்டு பல் துலக்கினார் என்பது போன்ற அற்ப விஷயங்களைச் சொல்லாது.

சொல்லவில்லை என்கின்ற ஒரே காரணத்திற்காக அப்படி நிகழ்வுகள் நடக்கவே இல்லை என்று சாதிப்பது அபத்தம்.

அப்படித் தேவைஇல்லை கதையின் ஓட்டத்திற்கு என வால்மீகி விட்டது தான் இந்த நிகழ்ச்சி.

உங்களுக்கு எல்லாம் ஏன் இந்தியனாகப் பிறந்திருக்கும் ஒவ்வொருவனுக்கும் தெரிந்திருக்கும் நிகழ்ச்சி அனுமன் சஞ்சீவி மலை கொண்டு வந்த கதை (தெரியாதவர்கள் சீக்கிரம் இந்தியன் ஆக முயலுங்கள்)

இந்திர ஜித்தின் மோகனாஸ்திரத்தால் வேகத்தால் இராம பிரானின் முழுச் சேனையும், இராம இலக்குவர்கள் உட்பட மயங்கிக் கிடக்கச் சஞ்சீவி மூலிகை கொண்டு வரும்படிப் பணிக்கப் படுகிறான் அனுமன்.

அனுமனுக்குச் சஞ்சீவி மலைப் பிரதேசத்தை அடைந்ததும் அங்குள்ள செடிக் கூட்ங்களில் எது சஞ்சீவி மூலிகை என அடையாளம் கண்டுகொள்ள இயல வில்லை. அப்படி அவன் அடையாளம் காண முடியாமல் திகைத்தது இந்த மானுட குலத்துக்கே நன்மையாக முடிந்தது.

அடையாளம் காண முடியவில்லையே என மற்றவர்கள் ஆயின் திகைத்திருப்பர்.ஆனால் இவனோ அனுமன் ஆயிற்றே, அட்டாங்க யோகத்தில் வல்லவன் ஆயிற்றே, எனவேதான் அந்த சித்திகளில் ஒன்றான ‘மகிமா’ என்ற சித்தியைப் பயன் படுத்தி மகா மேருவைப் போல் பெரிதாகிறான், பெரிய சஞ்சீவி மலையே இப்போது அவன் கையளவு சிறிதாகும் அவ்வளவுக்கு ஒரு மாப் பெரிய மஹா விஸ்வரூபம்.!

அப்படி அனுமன் அதைக் கையிற் பெயர்த்துத் தூக்கிய இடம் இற்றைய தமிழகத்திறன் வட மேற்குப் பகுதி. அவன் பெயர்த்து எடுத்த மலையின் ஒருபகுதிதான் இற்றைய கொல்லிமலை.அது கிடக்க.

இப்போது நம் கேள்விக்கு வருவோம். அனுமன் அப்படிப் பெயர்த்து உயரே எம்பிப் பாய்ந்து இலங்கைப் போர்களத்தை அடைந்த அந்தக் கணமே அவன் கையில் இருந்த சஞ்சீவி மலையின் காற்றுப் பட்டு மோகனாஸ்திர மயக்கில் கட்டுண்டு கிடந்த அத்தனை வானரர்களும் உயிர்தெழுந்தனர், புதிதாய், இன்னும் வலிவாய் என்னில் என்னே அம் மூலிகை மலையின் சக்தி?

இந்தச் சஞ்சீவி மலை பற்றி உயர்வு நவிற்சியாகச் சில கட்டுக் கதைகளும் தமிழக வழக்கில் உண்டு. மதுரை-திண்டுக்கல் சாலையில் சிறுமலை என்ற ஒன்று உண்டு. அனுமன் உயரே பறந்த போது அதில் இருந்து விழுந்த சுறு பகுதிதான் இந்தத் 900 அடி உயர 12 மைல் நீளச் சிறு மலை என்று வர்ணிப்பாரும் உளர். சிறு கல்லே இவ்வளவு பெரிது என்றால் அவன் கையில் இருந்த சஞ்சீவிமலை எவ்வளவு பெரிதாய் இருக்கும், அட அதை விட்டுத் தள்ளுங்கள், அனுமன் உயரம் எவ்வ்வ்வளவு இன்னும் பெரிதாய் இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் கற்பனைக்குச் சக்தி இருந்தால்!

அந்தச் சிறு மலைக்குச் சென்ற விறகுவெட்டி பசிக்காக ஒரு அணிலைப் பிடித்து கலயத்திலிட்டுத் தீ மூட்டியதாகவும், அதைக் கிண்டிவிட ஏதோ ஒரு குச்சியை எடுத்துக் கிளற, படக் கென்று அணிலின் வெட்டுண்ட உடற் கூறுகள் ஒன்று சேர்ந்து அணில் துள்ளிக் குதித்து ஓடியதாகவும் ஒரு கதை உண்டு.

இந்தக் கதை நிஜமோ, பொய்யோ எனக்குத் தெரியாது, வெறும் சஞ்சீவி மூலிகைக் காற்றுக்கு வானர ரும் பிறரும் மீட்டெழுந்தது நிஜம்.

அதற்கு அப்புறம்தான் நமது கேள்விக்கு விடையே வருகிறது. வால்மீகரைப் பொறுத்த மட்டில் அவருக்கு இராம இலக்குவர்கள் தம் வானர சேனையோடு அடுத்த நாள் போருக்கு யுத்த சன்னத்தர்கள் ஆக வேண்டும். இந்திர சித்தனின் நிகும்பலை யாகம் துவங்க வேண்டும் அது முடியும் முன்பு, இலக்குவனால் இந்திர சித்தின் வதம் நிகழ்த்தப் படவேண்டும்.

அதற்கான உத்திகளையும், காட்சி அமைப்புகளையும் அவர் கவி நடையில் படம் பிடித்துக் காட்ட வேண்டும் என்பதுவே அல்லாமல் அனுமன் கொண்டு வந்த சஞ்சிவி மலை பற்றி அவருக்குக் கவலை இல்லை, அதைச் சொல்ல வேண்டிய அவசியமும் கதை ஓட்டத்திற்குத் தேவையில்லை.

ஆமாம் நான் கேட்கிறேன், அந்தச் சஞ்சீவி மலை என்னவாயிற்று? அந்த மாமூலிகை மலை இப்போது எங்கே இருக்கிறது, என்றால் இருக்கிறது ஐயா இருக்கிறது. கடலுக்கு அடியில் பத்திரமாக இருக்கிறது.

அது அனுமனாலேயே இராமேச்சுவரம் சார்ந்த கடற் பகுதியில் அமைதியாக்க் கீழே அமிழ்த்தப் பட்டது. அமிழ்த்தப் பட்ட அம் மலை, அம் மலையில் உள்ள அத்துணை சஞ்சீவி மூலிகைகள் மட்டும் அல்ல், பிணிநீக்கும் மற்ற்றும் உயிர் காக்கும் அத்துணை மூலிகைகளும் கடலின் உப்பு நீரூக்குத் தக்கவாறு காலகாலப் போக்கில் தங்களை மாற்றிக் கொண்டுக் (adaptation) காடற் தாவரங்களாகவும் பாசிகளாகவும் மாறித் தம் மருந்து குணத்தை மட்டும் இழக்காமல் அந்தக் கடற் பகுதி நீரை மகத்துவம் மிக்க பிணிநூக்கும் கஷாயமாக மாற்றி வைத்திருக்கிறது என்றால் இது தெரிந்த பின்னும் சும்மா இருக்கலாமா நீங்கள்?

அட எங்கே ஓடுகிறீர்கள், இராமேச்வரத்திற்கு டிக்கெட் புக் செய்யவா?

வால்மீகி சொல்லாமல் விட்ட கதை . . .

வேள்வியில் தன்னை மதித்து அழையாமல் அலட்டியம் சொந்த அகங்காரத் தக்கன் மேல் ஆடல் அரையனுக்கு அசாத்தியக் கோபம். தேவர்களும், பிரமர்களும் அதில் பங்கேற்றது அதைவிடக் கோபம்.

அந்தக் கோபத்தின் பலன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தண்டனை கிடைக்கிறது.அதில் பிரமனுக்கு ஒருதலை கிள்ளி எறியப் படுகிறது.

நீங்கள் நினைப்பது பொல் பிரமனுக்கு 4 தலை அல்ல. முதலில் 5 தலை இருந்தது. கிள்ளி எறிந்தது போக மிஞ்சியது நான்கு அவ்வளவே.

‘ நல்ல மலரின் மேல் நான்முக னார்தலை
ஒல்லை அரிந்தது என்று உந்தீ பற. – எங்கள்
உருத்திர நாதர்க்கு உந்தீ பற ‘

-திரு உந்தியார் (மணிவாசகர்)

ஆனானப் பட்ட ஆடல் வல்லானுக்கே கிள்ளி எறியப் பட்ட தலைக் கபாலம் அவர் கையில் ஒட்டிக் கொண்டு உதற உதறப் போகாமல் அவரைப் பிச்சாடனர் ஆக்கிப் பிச்சையும் எடுக்க வைத்தது என்றால், அதுதான் பிரம்மஹத்தித் தோஷம்.

இராவணனோ பிராம்மணன். பிரம்மாவுக்குப் பேரன். புலத்திய மகரிஷி வழி வந்தவன். எல்லா வற்றுக் கும் மேலாகச் சிறந்த சிவ பக்தன்.. கேட்கவா வேண்டும் அதே பிரம்ம ஹத்தித் தோஷம் நிழலாகத் தொடர்ந்து வந்தது.

அதன் வேகம் குறைக்க இராம பிரான் அயோத்தி திரும்பும் வழியில்சிவபெருமானைப் பிரதிஷ்டை செய்து வழிபட்ட இடம் தான் இராமேச்வரம். நீராடி தோஷம் களைந்த இடம் தான் இராமேச்வரக் கடல்.

வால்மீகி இராமாயணத்தில் ஏனோ தெரியவில்லை, இந்த நிகழ்ச்சி இல்லை.
அவரால் எழுதப் பட்டதாகச் சொல்லப் படும் ஆனந்த இராமாயணத்திலும் இது இல்லை.

இங்கே சீதையின் ஏறற்ம் பற்றி என்னால் சொல்லாதிருக்க முடியவில்லை.
சீதை எதையும் வெளிக் காட்டாமல் அடக்கியே வைத்திருந்தாள். வெறும் ஒரே ஒரு சொல்லால் உலகங்களையே எரிக்கும் அளவு ஆற்றலும் பெற்றிருந்தாள்.

‘ எல்லையில் உலகங்கள் யாவையும் என்
சொல்லினாற் சுடுவன் அது தூயவன்
வில்லினுக்கு மாசு என்று வீசினேன் . . . ‘

என்று அவள் அனுமனிடம் பேசும் போது வியக்காதிருக்க முடிய வில்லை.

‘அருள் உறில் துரும்பும் ஓர் ஐந்தொழில் புரியும்’

வெறும் துரும்புக்கே இந்தச் சக்தி என்றால் சீதையைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? மனத்தால் எதை வேண்டுமாலும் பிடுத்து எது எதுவாக மாற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அது அதுவாக மாறும். அதுதான் அருளின் நியதி. சேது பந்தனம் செய்த அந்த்த் தீவிலே பிரம்மஹத்தித் தோஷம் விலக சிவனைப் பூஜிக்க வேண்டும்.

தெய்வத்தை வணங்க ஒன்று அந்த இடத்தில் ஏற்கனவே கடவுளின் உயிர் ஓட்டம் இருக்க வேண்டும் அல்லது அருள் வல்லான் ஒருவன் வா என்றால் நட்ட கல்லில் கூடக் கடவளின் சீவ ஒளி தானே இறங்கும்.

இரண்டாவது சொன்னதுதான் அங்கே நிகழ்ந்தது. நிகழ்த்திய அருள் அரசி சீதாப் பிராட்டி. அப்படி நிகழ்ந்த இடம்தான் பின்னால் இராமேச்வரம் என்று அழைக்கப் பட்டது.

வெறுங்கையால் மணலைப் பிடித்தால் கல்லாகிச் சிவலிங்கமாய் மாறுமா என்று நம்மவர்களே கேட்கும் போது அவர்களின் அறியாமை பற்றிச் சிரிப்புத்தான் வருகிறது.

சில சாமியார் கையை விசிறி காற்றை மோதிரமாக்கிக் காட்டினால் இவர்கள் வாங்கிக் கொள்ளுகிறார்கள். ஒரே ஒரு நியூட்ரான் யுரேனியத்தை மோதினால் அது பேரியமாகவும் க்ரிப்டான் ஆகவும் மாறுகிறது என வேதியல் சொன்னால் புரிகிறதோ இல்லையோ தலை ஆட்டுகிறார்கள். இன்னொரு சாமியார் கையை விரிக்க made in heaven என்றெல்லாம் முத்திரை போடாமல் tata product என முத்திரை போட்ட மோதிரம் திடீர்என வந்தால் சித்து என்கிறார்கள்.

சீதை தன் அருட் சக்தியால் காற்றையும் மணலையும் கட்டிக் கல்லாக்கிச் சிவலிங்கம் ஆக்கினால் கட்டுக்கதை என்கிறார்கள்; வெறும் புராணம் என ஒதுக்குகிறார்கள்; பகடி பேசுகிறார்கள்.

மிகப் பழைய தமிழ் இலக்கியங்கள் இராமேச்சுவரம் பற்றிப் பேசவில்லை. பேசிவை சில அழிந்து பட்டிருக்கலாம். அகநானூறு பறநானூறுகளில் இராமாயணக் கதை பற்றிப் பேசப் படுகிறது. ஆனால் இராமேச்சுவரக் கோவிலைப் பற்றிய பேச்சு இல்லை.

சிலப்பதிகாரத்தால் சீரங்கம் பற்றிக் கூடச் சேதி வருகிறது. அங்கயற்கண்ணி கோவில், மதுரைப் பெருமாள் கோவில் எல்லாம் பற்றிச் சேதி இருக்கிறது. இராமேச்சுவரம் பற்றி இல்லவே இல்லை. அதை விட இளங்கோ வடிகளின் சம காலத்தவர் ஆன மாணிக்கவாசகர் தன்னுடைய கீர்த்தித் திரு அகவலில் ஒரு பெரிய பட்டியலே போடுகிறார், இறைவன் எந்த எந்தக் கோவிலுக்கு அவரை அழைப்பித்தான், எந்த எந்தக் கோவிலுல் என்ன என்ன காட்டினான் என வரிசைப் படுத்துகிறார். அந்தப் பட்டியலிலும் இராமேச்சுவரம் இல்லை.

‘மதுரைப் பெருநன் மா நகர் இருந்து
குதிரைச் சேவகன் ஆகிய கொள்கையும்,
உத்தர கோச மங்கையுள் இருந்து
வித்தக வேடம் காட்டிய இயல்பும்
பூவனம் இதனில் பொலிந்நு இருந்து அருளி
தூவண மேனி காட்டிய தொன்மையும் . . .’

மதுரையில் இருந்து. திருப் பூவனம் வந்து, உத்தர கோச மங்கை வரை வந்தவர், அட இராமேச்சுவம் எத்தனை கல் தொலை, இங்கு வராமலே அப்படியே திரும்பி விடுகிறார்.

அவருக்கு இறைவன் அனுமதித்தது அவ்வளவுதான். எனவே வர வில்லை, பாட வில்லை என்பது தானே தவிர இராமேச்சுவரம் கோவில் அவர்காலத்தில் இல்லாது ஒன்றும் இல்லை. அது சைதைகாலம் தொட்டு இருந்தது. ஆனால் கடல் சூழ்ந்து தனித் தீவிற்குள் , எளிதில் புக ஏலாத்தாய்.

பாலம் போட்ட இக்காலத்திலேயே நமக்கு காலம் கூடவில்லை என்றால் அக்காலம் பற்றி என்ன சொல்ல?

கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த மணிவாசகர் இக் கோவிலைப் பாட வில்லையே தவிர, ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த திரு நாவுக் கரசரும், திரு ஞான சம்பந்தரும் வாயார வாழ்த்திப் படிகச் சுத்தமாகப் பாடுகின்றனர்.

இருவரும் ஆளுக்குப் பத்துப் பாட்டு அட்சர சுத்தமாக இராமேச்சுவரத்தை அண்ணல்செய் கோவில் என்றும், மால் செய்த கோவில் என்றும், சிலையினான் ( இராமர்) செய்த கோவில் என்றும் மாற்றி மாற்றிப் பாடுகின்றனர்.

வான்மீகர் இதைப் பாடாது விட்டாலும், நம் நாயன் மார்கள் இருவரும் இந்த இராமலிங்கப் பிரதிட்டை நிகழ்ச்சியைப் பாடாதிருக்க வில்லை. நாயன்மார் சொல்கின்ற வார்த்தை எல்லாம் எம் நாயகன் சொல் வார்த்தை என நம்புகின்றேன் நான். எம் நாயகன் சொல் வார்த்தையும் அதுவே.

வான்மீகரை அதற்காக நான் குறை சொல்லவில்லை. அவரின் கதைக் கோர்வு அனைத்தும் ஞானதிருஷ்டியில் அவர் கண்டு எழுதியவை. ஞான திருஷ்டி என்பது அடுத்து அடுத்து எதை பார்க்க விரும்புகறார்களோ அங்கே அவர்களை இட்டுச் செல்லும். பதினான்கு வருடமாக மெல்லக் கதை நகர்த்திய வான்மீகருக்கு, யுத்தம் முடிந்ததும், வீடணப் பட்டாபிஷேகம் முடிந்த கையோடு விரைந்து அயோத்தி சென்று தீப்பாய இருக்கும் பரதனைத் தடுத்து நிறுத்த வேண்டிய அவசரமான கட்டாயச் சூழ்நிலை.

எனவே அவர் ஞான திருஷ்டியில் இலங்கையில் இருந்து அயோத்தி மீண்டது ஒரு அவசர கதியில் செல்கிற நிர்ப்பந்தத்தால் இந்த இராமேச்சவர லிங்கப் பிரதிஷடை விடுபட்டிருக்கலாமே அல்லாமல், அவர் பாடாது விட்டு விட்டார் என்ற ஒரே காரணத்தால் இராமேச்சுவர நிகழ்வே பொய் என்றும், பின்னால் வந்தவர்களின் இடைச் செருகல் என்றும் வாதிப்பது சரி அல்ல..

எப்டி வால்மீகி இராமாயணத்தில் இடைச்செருகல் வர வாய்ப்பில்லையோ அதே போல்தாம் எம் தேவாரப் பாடல்களிலும் இடைச்செருகல் வர வாய்ப்பில்லை, ஏன் என்றால் இரண்டுமே, வாய்மொழியாக வழிவழி வந்தவைகள். மிகவும் பிற்காலத்தே தான் ஏட்டில் எழுதப் பட்டவைகள். எனவே பாட பேதம் வர வாய்ப்பில்லை.

அது வரை சுன்னஞ் சிறு கற்றளியாக இருந்த இராமேச்சுவரம் புகழ் பெற்றது அப்புறம் வந்த ஆதிசங்கரர் காலத்துக்கு அப்புறம்தான்.. அவர்தான் சமய இணைப்புக்காகவும் பாரத ஒற்றுமைக்காவும், காசியின் மகத்துவத்தை தெற்கிலும், இராமேச்சுவரத்தின் பெருமையை வடக்கிலும் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

அப்புறம் எனக்குத் தெரிந்த ஒரே ஒரு சின்னஞ்சிறு செய்தி. புஷ்பக விமானம்.
இராவணனிடம் இது வெகுகாலம் இருந்தது. இது ஒரு மிகப் பெரிய விந்தை. அதை எல்லாம் ஆராயும் அளவுக்கு அறிவியல் இன்னும் வளர வில்லை. யான் அறிந்த வரை அது வெறும் ஒளியால் இயக்கப் பட்டு, எங்கு செல்ல நினைக்கிறோமோ அங்கே செல்லும் படி எண்ண அலைகளால் செலுத்தப் பட்டும் வந்திருக்கிறது.இராம பிரான் இதைப் பயன் படுத்தியதாகத் தெரியவில்லை. இலங்கை விட்டு அயோத்திக்கு இதில் ஏறி அவரும் சீதையும் வந்ததாக்க் கூறப் படுவதில் எனக்கு முழு மறுப்பு. நடந்தே வந்தனர் என்பதே என் வாதம். இப்போதும் அந்தப் புஷ்பக விமானம் இருக்கிறது, எந்தைபிரான் நடததரையர் வசம்.
கந்தமாதன பர்வதம்

இப்போதுள்ள நிலையில் கந்த மாதன பர்வதம் இராமேச்சுவரக் கோவிலில் இருந்து 3 கி.மீ. தாரத்தில் சுக்ரீவர் கோவில், சுக்ரீவர் தீர்த்தம் எல்லாம் தாண்டிக் கடற் கரையோரம் உள்ள சிறிய மணற்குன்று..

ஆனால் அப்பொழுதோ, இராமாயண காலத்தில் இது ஒரு பெரிய மலை. பெரிய மலை என்றால் பாறைகள் நிறைந்த மலை.

‘ நீ நடந்த காலடி மண்ணைக்
காட்டிவிட்டுப் போ
எடுத்து திருநீறாகப்
பூசிக் கொள்கிறேன் . . . ‘

-என்றெல்லாம் கவிதை பாடும் இக்காலத்தில் உண்மையான இராம பக்தன் இருப்பானே ஆகில் அவன் இந்த கந்த மாதன பர்வதம் வந்து சட்டைகளை எல்லாம் கழற்றி வீசிவிட்டு மண்ணிலே புரண்டு, இது இது இந்த மண்துகள் இராம பிரான் பாதம் பட்டது, இது அனுமன் பாதம் பட்டது என உருண்டு உருண்டு ஆனந்திக்கலாம். அந்த அளவுக்கு இப் பகுதியில் இராம பிரான் பாதம் படாத இடமே இல்லை எனலாம். பெரியவனாகி விட்டேன் என்ற உங்கள் வயதையும மறந்து கொஞ்சம் இப்புனித பூமியில் உட்கார்ந்து, சறுக்கி விளையாண்டு குழந்தை போலக் குதூகலிக்க என்று வரப் போகிறீர்கள் நீங்கள்’?

இராம்பிரானின் பாதம் பட்ட மண் என்பதன் நினைவாக இரண்டு திருபாதங்களைச் செய்து கோவிலில் வைத்திருக்கிறார்கள் இங்கே.

பாறையாக இருந்த பர்வதம் வெறும் மணல் ஆனது எப்படி?

முதன் முதலில இங்கே வந்து ஏறி நின்று அநுமன் இலங்கையை நோக்கியதும் இந்தப் பர்வதம்தான். ஒரே உன்னு உன்னி சர் என உயரப் பாய்ந்த அந்த விஸ்வ ரூபத்தின் வேகம் தாளாமல் பாறைகள் பொடிப் பொடி ஆயின என நான் இங்கே எழுதா விட்டால் நியூட்டனின் மூன்றாம் விதியைப் பொய் என்று சொன்ன பாவத்திற்கு ஆளாவேன்.

நான் முதன் முதலில் முகவை வந்த போது (1981) என் பக்கத்து அறை நண்பர் ஒரு கணிதப் பேராசிரியர் ஒரு ஞாயிறன்று என்னை அழைத்தார்.

‘ சார் வாருங்களேன் உப்பூர் போகலாம் . . .வெய்யில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது. இராம்பிரான் வழிபட்டது . . .’

செல்லும் வழி எல்லாம் இருபுறமும் பார்த்துக் கொண்டே வந்த போது,

‘ எங்கேயாவது பெரிய பாறைகள் கற்கள் ஏதும் கிடக்கிறதா, பாருங்கள் ‘ என்றார். பார்த்தேன, எதுவும் இல்லை. மணல் மணல் ஒரே மணல் பிரதேசம்.

‘ ஆமாம். நெடுஞ்சாலைத் துறை நட்டு வைத்த மைல் கல் அன்றி எதுவும் இல்லை . . . ‘ என்றேன்.

‘ கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பார்த்தேன். இதுதான் இந்தப் பகுதியின் நில அமைப்பு போல் இருக்கிறது என்று வெகு சாதாரணமாக எண்ணிக் கொண்டேன்.

இன்னும் யோசித்துப் பார்க்கும் போது மதுரை சிங்கம் புணரிப் பக்கம்தான் மலையே வருகிறது, ஆமாம் இங்கே மட்டும் ஏன் இல்லை.?

படார் என ஒரு குண்டைப் போட்டு ஒரு உண்மையை உடைத்தார்.

‘ அவ்வளவு பாறைகளையும் குரங்குப் படைகள் எடுத்துச் சென்று சேது பந்தனத்திற்காகப் பாலம் கட்டி விட்டன. . .’

திடு திப் எனக் கேட்ட போது, சிரித்து விட்டேன் என்றாலும் நிதானமாக யோசித்த போது உண்மை என உணர்ந்தேன். உணர்ந்தீர்கள் என்றால் நீங்களும ஒரு நிஜமான இந்தியன்.. இல்லை என்றால் நம் கலாச்சாரப் பெருமையை, வரலாற்றைப் பண்பாட்டை மறந்துவிட்ட . . .ம்ம்ம்ம . . . என்ன சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை.

சேது பந்தனம்

தற்போதைய இராமேச்சுவரப் பேருந்து நிலையத்தில் இருந்து இராமநாத சாமி கோவிலுக்குப் போக்ம வழியில் மிக மிக சின்னஞ்சிறு அநுன் கோவில் ஒன்று உள்ளது. உள்ளே உள்ள நீர்த் தொட்டியில் ஒரு கல் ஒன்று நீரில் மிதந்து கொண்டிருக்கும்.

அதைக் காட்டி,

‘ பார் பார் இப்படித்தான் இராமர் அணை கட்டினார். கற்களை எல்லாம் மிதக்க வைத்தார். கற்களில் இராம நாம்ம் பொறிக்கப் பட்டு கடலில் எறியப் பட்ட போது அவை அமிழாமல் மிதந்தன்’

எனக் கண் எதிரே ஆதாரம் காட்டுவார்கள் வழிகாட்டிகள். இவைகள் நிஜமான கருங் கற்கள் அல்ல. PORUS வகை சார்ந்த இலகுவான கால்சியம் கார்பனேட்டுக் கடற பாறைகள் .

இராம பிரான் இப்படி மிதக்கும் பாறைகளை வைத்துப் பாலம் கட்டவே இல்லை. அது சாத்தியமும் இல்லை. அவரது வானர சேனைகள் பாறைகளை, மரங்களை புர்த்து எடுத்த இடம் எல்லாம் சேது பூமிப் பக்கம் இருந்துதானே தவிர கடலுக்குள் இருந்து அல்ல என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.

‘ மனிதர்களால் கட்டப் பட்ட எந்த அமைப்பும் பாலமும் கடலுக்குள் இல்லை’

-என்று திருவாய் மலர்ந்தருளியவர் ஒரு மகா மந்திரி என்றால் அவர் வார்த்தை எவ்வளவு நிஜமாக இருக்க வேண்டும்.

நிஹம்தானே, சேது பாலத்தைக் கட்டப் பணித்த இராம பிரான்் மனிதன் இல்லை, தெய்வ அவதாரம். கட்டிய படைகளும், மேற்பார்வை இட்ட நளனும் மற்றவர்களும் கூட மனிதர்கள் இல்லை, அவர்கள் வானர சேனைகள் ஆயிற்றே, அமைச்சரைப் பொறுத்த மட்டில் அவர் அறிக்கை நூற்றுக்கு நூறு விழுக்காடு அப்பட்டமான தோல் உரிக்கப் பட்ட உண்மை.

பாலத்தின் கட்டமைப்பு நம்மை வெகுவாகவே வியக்க வைக்கிறது. இப்போது சேது கால்வாய்த் திட்டம் வந்து விட்டது; வேலை ஆரம்பித்தும் விட்டது பாலத்த்தைத் தோண்டும் பணி என்பதே விட உடைக்கும் பணி என்பது பொருத்தமாக இருக்கும். மூன்று கப்பல்களின் யந்திரக் கூர் உடைந்து நாலாவது கப்பல் வந்திருக்கிறது நாட்டுக்கு நல்லது என்கிறார்கள். நடக்கட்டும்.

என்னைப் பொறுத்த வரை ஒரு சரித்திரச் சான்று உடைக்கப் படுகிறது. கடந்த பூஜ் பூகம்பத்தின் போது கண்ணபிரான் தேவியர்களின் அரண்மனைக் கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின என்ற செய்தி அறிந்த போது நான் நெஒர்த்தற்குக் காரணம் இனி வருங்காலத் தலைமுறை கிருஷ்ணாவதாரத்தைக் கட்டுக் கதை என்று சொல்லிவிடக் கூடாதே , துவாரகைதான் கடலுக்குள் போய் விட்டது, இதுவும் இப்படியா என்ற ஆதங்கம்தான்.

நாத்திகர்களைப் பொறுத்தமட்டில் இந்தச் சேது பால இடிப்பு என்பது அவரகளுக்கு இராம பிரானோடு நேரிடையாக யுத்தம் புரிந்து வென்றது போல் அத்தனை சந்தோஷம். அரசியல் வாதிகட்கோ இதை வைத்து ஓட்டு வங்கி பெருக ஒரு ஆதாயம்..

ICE BERG கேள்விப் பட்டிருப்பீர்கள், வெளியே பார்க்கச் சிறிதாக இருந்தாலும் உள்ளே ஆழமாகவும் அகல சகலமாகவும் அந்தப் பனிப் பாறை இருக்குமாம். அது போல்தான் இந்தப் பாலமும்.

இந்தப் பாலம் உடைக்கும் பணி மேற் கொண்டு வரும் M/S Aryaa Constructions அதிகாரி ஒருவரைச் சந்தித்த போது பாலம் வெட்டப் படும் அளவைப் பற்றி என்னால் உசாவாமல் இருக்க முடியவில்லை.

அவர் சொன்னது -. மொத்தம் 143 கி.மீ. நெடுக்கு வாக்கிலும் (அதாவது தென் வடலாக) மூன்றரைக் கி,மீ. குறுக்கிலும்(கிழக்கு மேற்காக) நடக்கிறது இந்த ஆழப் படுத்தும் பணி.

அதாவது நாகப் படடினப் பகுதியில் இந்த 143 என்பதன் முதல் கி.மீ. ஆரம்பிக்கிறது என்றால் இந்தச் சேது பாலத்தின் ஆழ அஸ்தி வார அகல விஸ்தீரணம் என்னை ஆஎன்று அண்ணார இல்லை இல்லை கடல் கீழே ஊடுருவ வைக்கிறது.

சாட்டிலைட் படத்தில் தனுஸ் கோடியில் இருந்து தலைமன்னார் வரை மணற் கயிறு போல் தெரிவது இந்தப் பாலத்தின் உச்சி யில் சேர்ந்துள்ள மணல் திட்டுகளே அல்லாமல் வேறில்லை. ஆனால் உள்ளே இருக்கும் இறுகிய பாறைகளைச் சாட்டிலைட் காட்டவில்லை. அவை சாதாரண மணல் திட்டுகள் அல்ல. பூதாகரக் கப்பல் யந்திரங்கள் உடைக்கத் திணறும் அளவுக்கு கனமான பாறைகள் என்றால் மிதக்கும் பாறைகள் எங்கிருந்து வந்தன?

இங்கு.’ மிதக்கும் பாறைகள் நிஜம் என்றால் மூன்று யுகம் முடியப் போகிறது, இன்னேரம் அவைகள் கடல் அலையால் அடித்தல்லவா சென்றிருக்க வேண்டும்?

அணை இருப்பது நிஜம். ஏறத்தாழ 20 கிமீ. தூரம் தனுஸ் கோடிக்கும் தலைமன்னாருக்கும். இடையில் வெறும் மூன்றரைக் கி.மீ.அதை ஆழப் படுத்தினால் எந்த ஊறும் நிகழப் போவதும் இல்லை அதனால் ஆபத்து என்ற கூக்குரலும் வேண்டாம். அமைதியாக இருந்து வேடிக்கை பார்ப்போம். ஒரு வாஸ்து நண்பர் கணித்த கணிப்பு இது, கிழக்கே 143 கி.மீ. அளவுக்கு மூன்றரைக் கி.மீ அகலத்துக்குப் பெரிய பள்ளம் என்றால் சேது பூமிக்கே அது நல்ல வாஸ்து பலம். செல்வம் செழித்தோங்கும் என்கிறார் . எப்படியோ எல்லா மக்களும் இன்புற்று வாழ்க.

இதற்கிடையில் இன்னொரு நண்பர் காது கடித்தார்.

‘சார் இவனுக வெட்டுறது இராமர் பாலமே இல்லை, அது வேறு இடத்தில் பத்திரமாக இருக்கிறது.’

யுகம் கடந்து வரும் போது பூமியின் கட்டமைப்பு எப்படியோ மாறும். இதுதான் என்று யார் கணிக்க முடியும் எங்கள் இறைவனைத் தவிர. அப்படி கணித்த கணிப்புத்தான் தனுஸ் கோடியில் இருந்துதான் சேது பந்தனம் ஆரம் பித்தது என்பது. இனி . .
தனுஸ்கோடி – பாடமும் எச்சரிக்கையும்

மூன்று நாள் வருணதவம் செய்தார் இராம பிரான். கடல் அடைக்கவும், பாலம் கட்டவும் சமுத்திர ராஜன் வருணன் நெகிழ வில்லை. எனவே சீராமன் சீற்றமுடன் தன் வில்லால் (தனுஸ்) இங்கே கோடியதால் இது தனுஸ்கோடி.

1964 புயல் வரை இது ஏற்றம் பெற்றதாய் இருந்தது. இங்கு வரை வந்த போட் மெயில் என்ற இரயில் மகவும் பிரசித்தம். இங்கு இருந்த சேது மாதவ தீர்த்தம்தான் இராமேச்சுவரத்தில் இருந்த அத்தனை தீர்த்தங்களிலும் முதல்.

இராம சேது இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது. கந்த மாதன பர்வத்த்தின் உச்சியில் இருந்து விஸ்வ ரூபம் எடுத்த அனுமன் தோள் மேல் அமர்ந்த இராம இலக்குவர்கள் A bird”s eye view இல்லை இல்லை பெரிய sattelite viewவே பார்த்துத் தீர்மானம் செய்தாயிற்று, இங்கிருந்துதான் அணை கட்டவேண்டும் என்று. இன்றைய ஸாட்டிலைட் படத்தில் கயிறுபோல் தெரிவது இந்தப் பாலமே.

இங்கேதான் சேதுமாதவன் கோவிலும் இருந்தது. கடந்த புயலில் இக்கோவிலும் சேதுமாதவதீர்த்தமும், ஊரின் எச்சங்கள் போக பெரும் பகுதியும் கடல் விழுங்கிவிட்டது.

எங்கெங்கு திருக்கோவில்களும் தீர்த்தங்களும் இருக்கின்றனவோ அங்கெல்லாம் மக்கள் புழக்கம் அதிகமாய்விட்டது. எங்கெல்லாம் மக்கள் புழக்கம் அதிகம் இருக்கிறதோ அங்கெல்லாம் அட்டூழியம் அதிகம் ஆய் விட்டது.
பிடுங்கலும் அதிகமாய் விட்டது.எந்தக் கலைக்கும் இலாவண்யம் என்ற பேர் இல்லை. அறுபத்து ஐந்தாம் கலையாகிய இலஞ்சக் கலைக்குமட்டும் அப்பேர் உண்டு. கோவிலிலும் அது பகுந்து விட்டது.

திருச்செந்தூர் போய் இருந்த போது கூட்டம் பிதுங்கி வெளி வரைநிற்க மலைத்தேன். வரங்கொடுக்க வந்த தேவதூதர் மாதிரி வயிறுதுருத்திய இரண்டுபேர் என்னை நோட்டம் விட்டனர்.

‘சார் ஆளுக்கு 100 நூறு ரூபாய் நேரே சன்னிதிக்குக் கூட்டிச் செல்கிறேன்’

விட்டால் இந்திர ஞாலத் தேரில் ஏற்றி முருகனைக காட்டவும் தயார் என்பது போல் வர நான் முறைத்தேன். சரி இது படியாது என அடுத்த பார்ட்டி பார்த்தனர். பிரசாதம் தேங்காய்பழத் தட்டு எல்லாமே அட்டகாசக் கொள்ளை . கேட்டால்-சன்னிதிக்குள் கடை டெண்டர் எடுக்க எவ்வளவு பணம் கொடுத்திருக்கறேன் தெரியுமா- என்ற எகிறல் எகத்தாளம்.

தானாகத் தந்தால் தானம். கேட்டுக் கேட்டு இழுத்தால் பிடுங்கல். இன்னொரு கோவிலில் விட்டால் வழிப் பறியே செய்வார்கள் போல் இருக்கிறது. யாத்ரிகன் பேருந்தை விட்டு இறங்கியுடனேயே செருப்பைப் பிடுங்க சிலர் காத்திருப்பார்கள்.ஓட்டலிலோ கேட்கவே வேண்டாம். தோசை சுட என்று அவர்கள் வீட்டு அங்கணம் கழுவிக் கட்டையாய்ப் போன விளக்குமார் வைத்திருப்பர். புரோட்டா மாவு பிசைவதை மட்டும் தயவு செய்து பார்த்து விடாதீர்கள், உங்கள் வயிறு பிசைந்தால் நான் பொறுப்பல்ல. யாத்ரிகன் தீர்த்தமாடினால் எல்லாம் சரியாய்விடும் என நினைத்துவிட்டார்கள் போல் இருக்கிறது.

என்னுடன் வேலை பார்க்கும் பாலுச்சாமி சிறுவயதில் இந்ததனுஸ்கோடிப் பகுதியில் வளர்ந்தவர். அங்கு நடத்த அக்கிரமங்களை எல்லாம் விவரிக்க விவரிக்க அதிர்ந்து போனேன்.

‘ ஆம சார் இவனுக பண்ற அட்டூழியம் பொறுக்காமத்தான் இந்தப் புயலே
வந்தது ‘ – என்றார்

புயலின் ஒரே இரவில் ஓஹோ என்று இருந்த ஊர் உள்ளே போக பயங்கரத்தின் மிச்சம் மட்டும் வெளியே தெரியப் பிணங்களிடமும் கொள்ளை அடித்தவர் எத்தனை பேர்.? இன்னொரு புயல் வந்தாலும் இவர்கள் திருந்த மாட்டார்கள். இன்னொரு உதாரணம் வேளாங்கண்ணி சுனாமி. பரந்த கோவிலாய் இருந்த காசி இன்று நடை பாதைக் கோவில் ஆனது யார் செய்த பாவம்? இன்னும் எத்தனை கோவில்களில் எத்தனை பக்தர்களின் வயிற்றெரிச்சல்கள்? காலமும் இயற்கையும் பதில் சொல்லும் காத்திருங்கள்.

இயற்கையின் சீற்றம் ஓய்ந்த 1964க்குப் பின் தனுஸ்கோடியின் கடற்பரப்புகள் சில மாறுதல் அடைந்தன. சில வதிகள் உருவாயின, பெர்மியூடா முக்கோணம் போல அந்த அளவுக்கு வேகம் இல்லாவிட்டாலும் கொஞ்சத்துக்குக் கொஞ்சம் அதன் குணம் கொண்டு.

கடலில் இப்பகுதியில் குளிப்பதைத் தவிர்த்தல் நல்லது. கடந்த புயலில் உருவான சொரி மணலின் ஊற்று வாய்கள் உங்களை விழுங்கக் காத்திருக்கின்றன. வெளியே நின்று வேடிக்கை பார்த்துவிட்டுத் திரும்பி விடுங்கள்.

வில்லூன்றித் தீர்த்தம்

இது சிறு கிணறு. ஆனால் சுற்றிலும் கடல்நீர் சூழ உள்ளது. சீராம்பிரான் சீதைக்காகத் தன் வில்லை ஊன்றிக் குத்திக் குடி தண்ணீர வரவழைத்த இடம்.
உப்புத்நீருக்கு மத்தியில் நல்லதண்ணீர் ஊற்றா, என்னில் அது இராமர் நிகழ்த்திய அற்புதம். யுக யுகம் கடந்து இன்று வரை நல்லதண்ணீராக இருப்பது, கவனிப்பார் இன்றை சிதலமடைந்து பாழ்ப்ட்டு வருகிறது. பாம்பனில் இருந்து இராமேச்சுவரம் செல்லும் வழியில் இடப்புறம் 3 கல் முன்பு உள்ளது

 

-மகுடதீபன் 9486102034
magudadheeban@gmail.com

 

4 Comments »

  1. 1
    ராஜா Says:

    அருமையான கட்டுரை மிக்க நன்றி ,

  2. 2
    Elango Says:

    அருமையான கட்டுரை மிக்க நன்றி ,

  3. 4
    SOMU Says:

    SUPER YA RAMANATHAPURATHIL EPPATI ORU AALA ATHUM NAMMA UCHIPULIYEL THANKS SIR NAN ENNUM UNKALITAM 100 MATANKU KATHUKITANUM


RSS Feed for this entry

பின்னூட்டமொன்றை இடுக