uthirakosamangai

Welcome to Sethu Boomi..!

சேது பூமி

———————————————————————————————

pl visit my new blog http://uthirakosamangai.wordpress.com

THIRU UTHIRA KOSA MANGAI

 

———————————————————————————————

திரு உத்திரகோசமங்கை “வலை ஸ்தலம்”…

…எல்லோரும் வெப் சைட்டை வலைத் தளம் என்பார்கள், ஆனால் இதுவோ எம் பெருமானின் முதற் திருக் கோயிலைப் பற்றியது. எனவே இது வலைத் தளம் அல்ல, வலைஸ்தலம் !
அது மட்டுமா, அவன் பரதவ வீரனாய் வேடம் தரித்ச்
சுறா மீனைக் கடலில் வலைவீசி அடக்கிய தலம்!
ஆகவே வலைஸ்தலம் என்று சொன்னது சரிதானே …!

உத்திரகோசமங்கையும் கடலும்…

உத்திர கோசமங்கையில் கடலா,
என்று கோவில் வந்த பேர்களும், மண்ணின் மைந்தர்களும்
புருவம் நெரிக்க வேண்டாம்.
ஆம் இங்கு நிசமாலுமே கடல் இருந்தது, அதுவும் கோவில் வாசலில் கடல் இருந்தது
என்றால் நம்புவது கொஞ்சம் கடினம்தான்.
திருவிளையாடற் புராணத்தில் வருகிறதே,
வலைவீசி விளையாண்ட படலம்
அது நடந்த இடம், இங்கே இங்கே இந்த ஸ்தலத்தில்தான்.

“ஆரா அமுதாய் அலைகடல்வாய் மீன் விசிறும்
பேராசை வாரியனைப் பாடுதும்காண் அம்மானாய்!’

என்று மணிவாசகர் அண்ணாமலையில் இருந்து கொண்டு பாடியது இங்கே நடந்த நிகழ்வு பற்றித்தான்.

நான் சிறு பிள்ளையாக இருந்த போது ஒரு கறைபடிந்த (வேட்டியைச் சொன்னேன்) மாண்புமிகு சொனனது நினைவிருக்கிறது.

‘ஏன் உங்கள் சிவபெருமான் மதுரையிலும்,
அதைச் சுற்றி உள்ள தென் பாண்டி நாட்டிலும்தான் திருவிளையாடல் புரிவாரா, டோக்கியோவிலும், வாஷிங்டன்னிலும் புரிய மாட்டாரா?’

புரிவாரடா புரிவார்.
அப்படி அவர் புரிந்த காலத்தில் டோக்கியோவும் வாஷிங்டனும் இல்லை என்பது வேறு விஷயம்.
அப்படியே அவர் கேட்டவாறு புரிந்திருந்தாலும்,
இன்னொரு கேள்வி கண்டிப் பாக எழும்,

‘ ஏன், வாஷிங்டனிலும், டோக்கியோவிலும்தான் ஆட வேண்டுமா, மாஸ்கோவிலும் பெர்லினிலும்  ஆடமாட்டாரா?’

ஆக, இது வலை வீசி விளையாண்ட தலம்.
ஆயின் எங்கே போயிற்று கடல், இப்போது?
என்றால் கால நிலையின் மாற்றத்தால், பூமிப் பரப்பின் மாற்றத்தால் அப்படியே உள் வாங்கி ஏர்வாடி வரை போயே போச்சு என்றால் உங்களுக்கு நம்புவது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும், என்ன செய்ய, உண்மையை எப்படியாவது உரைப்பதுதான் என் வேலை.

நானும், எங்கள் தேர்தங்கல் தாத்தா சாமிக்கண்ணு சேர்வையும் ஒருதடவை இப்படித்தான் திரு உத்திர கோசமங்கைத் தெப்பக் குளப் படித்துறையில் உட்கார்ந்திருந்த போது, கோவில் வாயிலில் கடல் இருந்த விஷயம் சொன்னேன்.
குளத்து நீரை உற்றுப் பார்த்தவாறே அதிசயித்துக் கேட்டுக் கொண்டிருந்த அவர், திடீர்என்று,

‘ஆமா, நீங்கள் சொல்றது, நிசந்தான்’ – என்றார்.

எனக்குக் கடல் பற்றிய அறிவும், கடல்வாழ் மீன பற்றிய அறிவும் கொஞ்சம் மட்டு என்பதால் அவர் சொன்னதை அப்படியே சொல்கிறேன்.

உத்திரகோசமங்கைக் கோவிற் குளத்தில்
அவர் பார்த்துக் கொண்டிருந்த மீன்கள்
நல்ல நீரில் வாழும் மீன்கள் இல்லையாம்,
உப்பு நீரில் அதாவது கடல் நீரில் வாழும் மீன் வகையைச் சார்ந்தவையாம்.
இதுவும் எனக்குப் புதுமையான ஆதாரமாகப் பட்டது.

கோவிலின் வெளிப்பிரகாரத்துத் தூண்கள்,
நந்தி சிலைகள் முதலியன எனக்குக் கடல்வாழ் பாறைகளை நினைவு படுத்தின; கடற் காற்று அரித்த எச்சங்களைப் பறை சாற்றின.

மண் முந்தியோ இல்லை …

எங்கள் பகுதிப் பக்கம் இன்றும் கூட ஒரு சொல் வழக்கு உண்டு, குறிப் பாக எங்கள் உத்திர கோச மங்கைப் பகுதி மக்கள் அடிக்கடி சொல்வார்கள்.

‘மண் முந்தியோ . . . இல்லை . . . மங்கை முந்தியோ . . .’

வெறும் வார்த்தை இல்லை இது, அப்படியே நிஜம்.
காரணம் கோலின் தொன்மை அப்படி.
இராவணன் அரசாண்ட போது இந்தக் கோவில் இருந்நிருக்கிறது. இராமேச்வரம் எல்லாம் தோன்றுவதற்கு முன்பே இந்தக் கோவில் இருந்திருக்கிறது.
இராவணன் மனைவி மண்டோதரி கூட
இங்கே வந்து வழிபட்டுச் சென்றதாகச் சொல்லப் படுகிறது.

‘அழகமர் வண்டோதரிக்குப் பேர்அருள் அளித்த பிரான்’

என்று சிவ பெருமானைப் பாடுகிறார் மணிவாசகர்.
மேலே கடல் பற்றிச் சொன்னேன்.
இப்போது இன்னும் முன்னே முன்னே செல்கிறேன்.
ஆமாம் இராமாயண காலத்துக்கும் முந்தி,
கந்தப் புராண காலத்திற்கும் முந்தி.
அப்போது இந்துமாக் கடல் தெற்கே இல்லை.
எல்லாம் ஒரே நிலப் பரப்பாக இருந்தது.
இலங்கை என்றொரு தீவு எல்லாம் இல்லை.
ஒரே கண்டமாக இருந்தது,
ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை.
அதை இலெமூரியாக் கண்டம் என்பார்கள்.

இலை – மூரி என்றால் சோற்றுக் கற்றாலை.
இலை மூரிக் கண்டம் இலெமூரியாக் கண்டம் ஆனது.
சோற்றுக் கற்றாலையின் இன்னொரு பேர் குமரி.
எனவே கற்றாலை மிகுந்த பெருநிலப் பரப்பு
குமரிக் கண்டம் ஆயிற்று.. ..

ஏழ்பனை நாடு, ஏழ் தெங்க நாடு முதலிய 49 நாடுகள் இருந்ததாகவும் தெரிகிறது.
பஃறுளி ஆறு இருந்தது.
பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடு என்ற மா மலை இருந்தது. இவை எல்லாம் கடற் கோளால் ( சுனாமி என்றால்தான் தெரியுமா?) எழுந்த ஆழிப் பேரலையால்
மூழ்கிப் போயிற்று என்று இளங்கோஅடிகள்
பிற்காலத்தில் பாடுகிறார்.

பஃறுளி ஆறுடன் பன்மலை அடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள . . .’

எல்லாவற்கும் மேலாய,

‘மன்னும் மாமலை மகேந்திரம் அதனில்
சொன்ன ஆகமம் தோற்றுவித்து அருளியும்’

என மணிவாசகர் பாடும் மகேந்திர மலை இருந்த து.
முதற்சங்க காலத்துக் கபாட புரம் இருந்தது.
தமிழின் தலைச் சங்கம் இருந்தது.
அதற்கெல்லாம் முன்னே மலயத்துவச பாண்டியன் அரசாண்ட போது, அவன் செல்வத் திருமகளாய் எம்மாட்டி அங்கயற் கண்ணி அவதரித்த போதிலேயே இந்க்க் கோவில் இருந்திருக்கிறது என்றால் இதன் தொன்மையைப் பற்றி என்ன சொல்ல?

ஆகவே இது சங்கம் கடந்து,
கால வெள்ளம் கடந்து
யுகம் கடந்து நிற்கும் கோவில்.
மீனாட்சி காலத்துக் கோவில் என்றுதானே சொன்னேனே தவிர இப்போது உள்ள மீனாட்சி கோவிலோடு
குழப்ப வேண்டாம், இது பின்னால் எழுந்தது.
பழைய மீனாட்சி கோவிலையும் கடல் கொண்டு விட்டது.

குமரிக் கண்ட காலத்தில்
இந்த உத்திர கோசமங்கைக் கோவிலில்
இப்போது இருக்கிற மாதிரித்
தனியாக நடராசர் சன்னிதி எல்லாம் இல்லை
இலிங்க வழிப்பாடும், அம்பிகை வழிபாடும் மட்டுமே இருந்தது. இதோடு சேர்ந்து இன்னொரு அற்புதமான சேதி.
சைவமும், வைணவமும்
அக்காலத்தில் எவ்வளவு ஒற்றுமையாக இருந்தன என்பதற்கு எடுத்துக் காட்டு இது.

தற்போதைய கோவிலில் நடராசர் சன்னதிக்கு
மேற்கேஉள்ள இடத்தில்
பெருமாளின் கிடந்த திருக் கோலம் இருந்திருக்கிறது.
குமரிக் கண்ட காலத்தில் அதற்கு வழிபாடும் நடந்து வந்திருக்கிறது. என்ன காரணமோ
இல்லை சைவ வைணவப் பிணக்கோ தெரியவில்லை
இப்போது அந்த இடம் மேலே கட்டப் பட்டு
உமா மகேச்வரர் சன்னிதியாகக்
கால வெள்ளத்தில் மாறி விட்டது.
உள்ளே மூடப் பட்ட நிலையில் பெருமாள் சிலை இருப்பதாகவும் ஒரு வழக்கு இருக்கிறது.

மரகத நடராசர் சன்னிதி . . .

கோவிலின் தொன்மைதான்
குமரிக் கண்டக் காலம் என்று சொன்னேன்.
எங்கள் ஆடல் வல்லானுக்கு என்று
நம் தமிழ்நாட்டில் ஏன் உலகில் என்று கூடச் சொல்ல்லாம்,
முதன் முதலில் உருவச் சிலையும் வழிபபாடும் உதித்த இடம் இந்த உத்தர கோசமங்கைக் கோவிலில்தான்,
அதுவும் நமக்கு வரலாறு எடடிய காலத்தில்தான்.

கி.பி. 2-ம் நூற்றாண்டு வாக்கில்தான்
முதல் நடராசர் வழிபாடே தோன்றியது.
அதற்கு முன் சிவ வழிபாடு என்பது வெறும் இலிங்க வழிபாடே. இப்படி நடனக் கோலத்தில்
எம்மானை வணங்கும் வழக்கம் ஏற்படுத்தியவர்
எங்கள் சண்முக வடிவேலர்.
இவரை நாங்கள் வெண்ததாடிப் பெரியவர் எனச்
செல்லமாய் அழைப்போம்.

இந்த நடராசர் சிலை
உத்திர கோசமங்கையின்
ஏன் எங்கள் சேதுபூமியின் தனிப்பெரும் சொத்து.
ஆனானப்பட்ட கோகினூர் வைரமே
வெறும் நெல்லிக்காய்த் தடிதான்.
அதறகு அவ்வளவு பெரிய சண்டை எல்லாம் போட்டுக்
கடைசியில் இரஞ்சித் சிங் மகராசாவிடம் போய்ப்,
பிடுங்கப் படாத குறையாகப்
பிரிட்டஷ மணிமகுடத்தில் போய் உட்கார்ந்துவிட்டது.

நல்ல வேளை,
இந்த மரகதச் சிலையைத் தாபித்த பெரியவர்
இதற்குச் சந்தனக் காப்பு இடும் முறைமையை ஏற்படுத்தினார்.

யார் கண்ணையும் இது உறுத்தாமல் தப்பித்தது.
களப்பரர்கள, ஐந்தாம் சாதியினர், ஆங்கிலேயர் என்று
எத்தனையோ படைஎடுப்புக்களைச் சந்தித்த போதும்
யாருக்கும் தெரியாமல் இது தப்பித்துக் கொண்டது.

இது மரகதம். விருப்பாட்சி சேர்த்து ஒரு ஏழடி
உயரம் இருக்கும். மரகதம் மிகவும் மென்மையான கல்.
சாதாரண ஒலி அலைகள் கூட மரகதத்தை உதிர
வைக்கும் என்பதால்,

‘ மத்தளம் கொட்ட மரகதம் உதிரும்’

எனும் வழக்கு மொழி எழுந்தது.
கோவில் என்றால்
மத்தளம் –  கொட்டு முழக்கு – இல்லாமலா?
இவ்வாறு எல்லாம்
மரகதச் சிலைக்கு ஊறு ஏற்படலாகாது என்று எண்ணித்தான் சந்தனக் காப்பிடும் முறையை உண்டாக்கினாரோ
எம் சண்முக வடிவேலவர்?

மரகதக் கல் ஒலிக்கே உதிரும் என்னில்,
செதுக்கும் உளிக்குமுன் எப்படித் தாங்கும்.?
இந்தச் சிலையை வடித்த விதம் ஓர் அற்புதம்.
உளி கொண்டு பொளிக்கப் பட்டதல்ல இச்சிலை.
மனத்தால் நினைத்து உருவாக்கப் பட்டது.
இந்த விவரம் தெரியாத நம்மவர்கள் இதைச் சுயம்பு என்கின்றனர்.

இங்குள்ள எம் ஆடல் வல்லானுக்கு
நித்திய அபிஷேகம் எதுவும் கிடையாது.
காரணம், வருடம் பூரா,
சிலை சந்தனக் காப்பு தரித்தே இருக்கும்.
ஆண்டுக்கு ஒருமுறை மார்கழித் திங்கள் திருவாதிரைத் திருநாள் அதற்கு முதல்நாள்  சந்தனக் காப்பு களையப் படும்.
அன்றுபகல் முழுக்க எம் தனிச் சபைத்
தலைவனைக் காப்புக் களைந்த திருக் கோலத்தில் தரிசிக்கலாம்.
அன்றுபூரா ஒன்பது வகை அபிஷேகங்கள் நடைபெறும்.

இரவு மறுபடியும் காப்பு இட்டபின்

அடுத்த அபிஷேகம் என்பது அடுத்த திருவாதிரைக்குத்தான்.

ஆண்டுமுழுக்க மரகதச் சிலையில்
காப்பிடப் பட்டிருந்த
சந்தனத்தைப் பெற பக்தர்களிடையே பெரிய போட்டாப் போட்டிநடக்கும்.
இப்பொழுதெல்லாம் தேவஸ்தானத்திலேயே அதைப் பாக்கெட் போட்டு விற்க ஆரம்பித்து விட்டார்கள்……
கோவிலில் சுரங்கமா ?

கோவிலைப் பற்றிய சேதி என்றால் சுரங்கம் இல்லாமலா?
கண்டிப்பாக அங்கே ஒருசுரங்கம் இருக்கும்,
அதன் அடுத்த முனை ஏதாவது ஒரு கோட்டைக்குள் முடியும். எதிரிகளின் படை எடுப்பின் போது இராசா இராணிகள் எப்படித் தப்பித்தார்கள் என்று கோவில் வழிகாட்டிகள்
சொல்லிச் சொல்லிக் காட்டியே பழக்கப் பட்டுவிட்ட உங்களுக்கு இங்கேயும் அப்படிக் காட்டினார்கள் என்றால்
எங்கோ பார்த்த படி கொஞ்சம் அந்த நேரம் மட்டும் அசுவாரசியமாய் இருங்கள்.

மற்றபடி நடராசர் சன்னதி நுழைவாயிலில்
வார்கால் கல்மூடியை நீக்கி அரண்மனை போகும் சுரங்கம் என்றால் அது ரீல்ரீலா விடும்பீலா, அவ்வளவே.

என்றால் உத்திர கோச மங்கைக் கோவிலில்
சுரங்கமே இல்லையா என்றால் இப்போது இல்லை

உத்திர கோசமங்கைக் கோவிலிலும்
சுரங்கம் இருக்கத்தான் இருந்தது.
ஆனால் அவைகள் மனிதரால் ஏற்படுத்தப் பட்டவை அல்ல.
அப்படி ஏற்படுத்தல் சாத்தியமும் இல்லை.
இங்கிருந்து, சரியாகச் சொல்லப் போனால் உமாமகேச்வர
சன்னதிக்குக் கீழே இருந்து அதாவது பெருமாள் சன்னதியில் இருந்து தில்லைக்கும், இராமேச்வரத்துக்கும், ஏன் மெக்காவுக்கும் கூடச்சுருங்கை வழிகள் இருந்தன.
நடத்தரையன் மனத்தளவில் நினைக்க பூமி உள்ளே விரிந்து கொடுக்கச் சாதாரண மக்களுக்காக உருவாக்கப்
பட்டவை அல்ல அவை

அவைகள் அந்தக்கால
முனிவர்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
காடுகள் நாடுகள் இனங்கள் போர்கள் முதலிய பல்வேறுதடைகளில் சிக்காவண்ணம் நேரிடையாகச் செல்ல எம்மானின் திருக் கூட்டத்தார்க்கு மட்டும் அறிவிக்கப் பட்டு இருந்தவை இப்போது
நவீன காலத்தின் இடர்பாடற்ற இனிய பயணங்களால் அவனாலேயே செயல்இறந்தன.

இந்தச் சீவ உயிர் ஓட்டமும்,
வழித் தட ஓட்டமும் தில்லைக்கும், இராமேச்வரத்திற்கும் என்னில் அதிசயம் இல்லை எனக்கு.
அது மெக்காவின் பெருங்கல் தீர்த்த நீர்நிலை ( ஜம் ஜம்? ) வரை சென்றிருக்கும் செய்திதான் வியப்பைத் தருகிறது.

கயிலாயத்தின் நான்கு திசைகளிலும்
1087 சிவாலயத் தலங்கள் இருந்தன
எனப் பெயரோடு பட்டியல் இடுகிறது மதுரைத் தமிழ் அகராதி.
அதில் கயிலைக்கு மேற்கே உள்ள
மகேச்வரமும் ஒன்று.
இந்த மகேச்வரம்தான் மக்கேச்வரம் ஆகி மெக்கா எனத் திரிபு பட்டதோ ஒருவேளை ?

மெக்காவில் உள்ள
காபாக் கல்லைப் பற்றிச் சொல்லும் போது
சொர்க்க வானில் இருந்து ஒளிப் பிழம்போடு இறங்கியது’

என்று விவரிக்கிறது திருக்குரான் மறைநூல்.

திருவாசகம் படித்துக் கொண்டிருந்த எனக்கு நச்சென்று இந்த இரண்டு சேதிகளும் இறங்கித் துருவத் தொடங்கியது.

‘தானே ஆகிய தயாபரன் எம்இறை
சந்திர தீபத்துச் சாத்திரன் ஆகி
அந்தரத்து இழிந்து வந்து அழகு அமர் பாலையுள்
சுந்தரத் தன்மையொடு துதைந்து இருந்து அருளியும் . . . ‘

இது மாணிக்க வாசரின் கீர்த்தித் திருஅகவல்.
இன்னொரு முறை பாடலைப் படியுங்கள்.
பாலைநிலத்துள்
அந்தர வான் விட்டு இழிந்நு இறங்கியது என்றால்
எது பாலை? எது அது? அது மெக்காவேதான் !

மணிவாசகரும் மங்கைப் பதியும் . . .

ஒரு சின்னக் கேள்வி.
கொஞ்சம் ஆன்மீக அறிவு உள்ளவர்கள் அனைவரும்
பளிச் என்று பதில் சொல்லி விடுவார்கள் இதற்கு.

1. பதஞ்சலி முனிவரின் சமாதி எங்கு உள்ளது?

அ) – நாக பட்டினம்
ஆ)- திரு நாகேச்வரம்
இ)- திரு வேற்காடு
ஈ)- இராமேச்வரம்

2. போக முனிவரின் சமாதி உள்ள இடம் எது?

அ)- சீனம்
ஆ)- உரோம் நாடு
இ)- சதுரகிரி
ஈ)- பழநி மலை

3. கருவூர் தேவர் மகா சமாதி உற்ற இடம் எது ?

அ)- கருவூர்
ஆ)- கரூர்
இ)- மருத மலை
ஈ)- தஞ்சை

உங்கள் கேள்விக்கான விடைகள் எல்லாமே ஈ-தான்.
தவறாக பதில் அளித்தவர்கள் ஈஈஈ என அசடு விட்டு மேலே
படியுங்கள்,

4.) மாணிக்க வாசகரின சமாதி எங்குள்ளது ?

இந்தக் கேள்விக்கு யாரும் பதில் அளிக்க முடியாது, ஏன்
என்றால் கேள்வியே தப்பு.

எல்லாச் சித்தர்களையும் போல் மணிவாசகர் ஒன்றும் சமாதி
ஆகவில்லை, அப்படி இருக்கும் போது சமாதி எங்கிருந்து வரும்?

அங்ஙனம் ஆயின் என்னவாயினார் மாணிக்க வாசகர்?

அவரையே கேட்போம்.

கரணங்கள் எல்லாம் கடந்து நின்ற கறைமிடற்றன்
சரணங்களே சென்று சார்தலுமே தான் எனக்கு
மரணம் பிறவி இரண்டின் மயக்கு அறுத்த
திரணப் பொற் சடையாற்கே சென்று ஊதாய் கோத் தும்பீ . .’

ஆக, மணிவாசகருக்கு இறப்பும் இல்லை, பிறப்பும் இல்லை.
மனிதனால் சாவாதிருக்க முடியும் என முதன் முதலில்
ஆணித்தரமாகச் சொன்னவர் மணிவாசகர்.
அந்தச் சாவாக் கலை நெறியை அருளும் இறைவனை,
முழுமுதற் பொருளை,
‘அருட்பெருந்தீ’

எனப் பெயரிட்டு அழைத்தவர் மணிவாசகர்.
அப்படிப் பட்டவருக்கு சமாதி என்ற ஒன்று எப்படி இருக்க
முடியும்.?
நீங்கள் உத்திர கோச மங்கைக் கோவிலுக்கு ஒருதரம்
போய்வாருங்கள்.
ஓதுவாரும், குருக்களும் ஒவ்வொன்றாய்ச் சொல்லிக் காட்டுவார்கள்.
ஒவ்வொன்றாய் சுற்றிக் காட்டுவார்கள்.
மணிவாசகப் பெம்மானால் பாடல் பெற்ற தலம் இது என்பார்கள்.
நீத்தல் விண்ணப்பம் – 50 பாடல்களும் இங்கே இங்கே இந்த
உத்திர கோசமங்கையிலே அருளிச் செய்தவை எனபார்கள்.
புத்தகத்திலே தில்லையில் அருளியது என்று போட்டிருந்தாலும்,
திருப் பொன் ஊசல்-9 அற்புதப் பாடல்களும், உத்திர கோச மங்கையை
நினைத்துக் கொண்டே பாடியதாம் என்றும் சொல்வார்கள்.
மணிவாசகர் இங்கே தவம் செய்தார் என்பார்கள்.

ஆனால் ஒருவரும் அவர் சாகவே இல்லை. இங்கேதான் அவர்
ஒளிஉருவை அடைந்தார் என்று சொல்லவே மாட்டார்கள்.

ஒருவரும் அவர் மரணம் வென்றவர், இறவாக்கலை பயின்றவர்.
இங்கேதான் சோதி உரு அடைந்து இன்னும் இருக்கிறார் என்றும்
சொல்ல மாட்டார்கள்

அதுதான் எனக்குக் கொஞ்சம் மனவருத்தம்…
மணிவாசகரும் இலந்த மரமு்ம் ( தல விருட்சம்)

இந்த உத்திரகோச மங்கைக் கோவிலின்
தலவிருட்சம் இலந்த மரம்.
இந்தப் பகுதியில் அபூர்வமான மரம் இது.
இந்த இடம் விட்டலால் எங்கள் பகுதியில் வேறெங்கும்
இலந்த மரம் யான் கண்டதில்லை.
அதுவும் இந்தத் தலவிருட்சம் இன்னும் மிக மிக அற்புதம்.

எங்கள் மணிவாசக வள்ளல் இங்கே இந்த மரத்தடியில்
அமர்ந்திருக்கிறார். மணிவாசகர் காலம் 2-ம் நூற்றாண்டு(கி.பி).
என்றால் இந்த மரத்தின் வயது என்ன?

மர இயல் வல்லுநர்கள் இந்த மரத்தின் வயது 3000 ஆண்டுகள்
எனக் கணக்கிட்டுள்ளனர்
இங்குள்ள அர்ச்சகர்கள், மற்றும் ஓதுவார்கள் சொல்கிறார்கள்,
இதே மரத்தடியில்தான் பராசரர், வேத வியாசர் முதலியவர்கள் எல்லாம்
தவம் செய்தனர் என்று.

பதஞ்சலி, வியாக்கிரமர்கள் கூட இங்கு இந்த மரத்தடியில்
நிட்டையில் இருந்ததாகவும் சொல்லப் படுகிறது.

ஒன்றுமட்டும் நிச்சயம். இந்த இலந்த மரம் பல பல அருட்
தலைமுறைகளைப் பார்த்தது; மாமுனிவோர்களைத் தன் பாதவேர்களில் தாங்கியது; பல சீவன் முக்தர்களுக்கு அருள்நிழல் தந்தது. தானும் மரணம் வென்று இருப்பது.

மரகதச் சிலை எங்கள் சேது பூமியின் பெரிய சொத்து என்றேன்.இந்த இலந்த மரம் எங்க பூமியின் மகா பொக்கிஷம்.

முதன் முதலில் எம் அன்னையுடன் இங்கு வந்த போது
மரத்தின் காலம் காட்டும் மரமுண்டுகளை வேடிக்கை பார்த்தேன்.

‘டேய், காதுகள் வளர்த்து, சடா முடிகளோடு ஒருவர் இருக்கிறார்.தன்னை மாணிக்க வாசகர் என்கிறார்’

-என்று அன்னை உரைத்ததுதான் தாமதம், அப்படியே கதறியபடிக்குப்புற வீழ்ந்தேன சாட்டங்கமாய்.
வெகுநேரமாய் நான் எழுந்திருக்கவே இல்லை.

உத்திரகோசமங்கை ஊர்

எல்லோரும் சொந்த ஊர் எது என்று கேட்டால் பிறந்த ஊரைச்
சொல்வார்கள். ஆடல் வல்லானோ பிறப்பிலி. அவர் எந்த ஊரைச்
சொல்லுவார்.

இன்னும் சிலர் சொந்த ஊர் என்றால் தங்கள் பூர்வீக ஊரைத் தாய்தந்தை,
தாத்தா முன்னோர்கள் வாழ்ந்த ஊரைக் காட்டுவார்கள்.
எம்மான் ஆடல்அரசனோ தாயும் இலி தந்தைஇலி. எனவே அவர்
எந்த ஊரைக் காட்டுவார்.?

கயிலை என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.
அதுகூடச் சீனாக் காரனிடம் போய்விட்டது.
அப்பனைக் கும்பிடக் கூட அவன் அனுமதி வேண்டும்.
பாஸ்போடர்ட் விசா எல்லாம் வேண்டும்

மாணிக்க வாசகர் பார்த்தார். அப்பன் நடத்தரையனுக்கு 1087 தலங்கள் இருந்தாலும், பாண்டிநாடே அவன் பதி, உத்திரகோசமங்கையே அவன் சொந்த ஊர் என்கிறார், உலகத்தின் இதயஸ்தானம் என்று சொல்லப் படுகின்ற தில்லைச் சிதம்பரத்துக்கே இங்கிருந்துதான் மையத் தொடர்பு இருந்தது, இராமேச்வரத்துக்கும், ஏன், மெக்கேச் வரத்துக்கும் அதுவே என்னில், வேறு நான் என்ன சொல்ல?

‘பாண்டி நாடே பழம் பதி ஆகவும்
பத்திசெய் அடியரைப் பரம் பரத்து உய்ப்பவன்
உத்திர கோச மங்கை ஊர் ஆகவும் . . .’

-கீ.தி.அகவல்

மட்டுமா, எங்கள் பகுதித் தமிழ் அறிஞர் வாயைத் தித்திக்க வைக்கும்
இன்னொரு பாடல் மணிவாசகத்தின் திருத் தசாங்கத்தில் இருந்து.

‘ தாதாடும் பூஞ்சோலைத் த்த்தாய் நமைஆளும்
மாதாடு பாகத்தன் வாழ் பதி என் – கோதாட்டி
பத்தர்எலம் பார்மேல் சிவபுரம்போற் கொண்டாடும்
உத்திர கோச மங்கை ஊர்.. . .’

இந்தத் திருத் தசாங்கத்தில் ஒவ்வொரு கேள்வியையும் கிளியிடம்
கேட்டுப் பெறுகிறார். மணிவாசகப் பெம்மான். உத்தார கோசமங்கை
அவர் காலத்து இருந்த மங்கையாக இல்லை. எல்லாமே மாறிவிட்டது.
இன்றும் கூடக் கோபுரங்களில் அந்தக் கிளிக் கூட்டங்கள் இருக்கின்றன.
அது மட்டும்தான் மாறவே இல்லை. நம் மனிதர்கள் இல்லை, அவைமட்டும,
அவைமட்டுமே கீச் கீச் என்பதற்குப் பதிலாக ஊர்பேரை உச்சரித்துக் கொண்டிருக்கின்றன.
நணபர் ஒருவர் திருவாசகத்தை சொல் சொல்லாகப் பிரித்து எண்ணியிருப்பார் போல் இருக்கிறது, உத்திர கோச மங்கை என்ற சொல் மொத்தம் 38 தடவை வருவதாக எழுதி இருக்கிறார்.

‘மன்னூற மன்னுமணி உத்தர கோச மங்கை
மின்னேறு மாட வியனமா ளிகை பாடிப்
பொன்னேறூ பூண் முலையீர், பொன் ஊசல் ஆடாமோ . . . ‘

மின்னேறு மாடங்களும், மஞ்சு தோய் மாட மணி உத்தர கோச மங்கையும்
இப்போது எங்கே? மணி வாசகர் இந்தப் பொன் ஊசல் 9-பாடல்களிலும்
உத்தர கோச மங்கையைப் பாடுகிறார். இன்ற்றைநாள் வரைக்கும் எல்லா முக்கியச் சிவாலயங்களிலும காலியில் எம்மானைப் பள்ளி அனுப்பும் போது
இந்தப் பொன்னூசல் பாடலப் பாடி. உத்தர கோச மங்கைக்கு அரசே என்று அனுதினம் இறைவனை விளிக்கிறார்கள் என்றால் ஊர்ப் பெருமை பற்றி வேறு என்ன சொல்ல ?

வேறு என்ன சொல்ல? ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்கள் வீட்டுக் குழந்தைகளுக்கு முக்கியம் இரண்டு. ஒன்று தாய்ப்பால், இன்னொன்று தமிழ்பால். இரண்டாவதைத் தாலாட்டுப் பாடும் போதே திருவாசகத் தேன் கலந்து கொடுத்துப் பாருங்கள்.

முதலில் நீங்கள் மனப் பாடம் செய்யங்கள், இந்த 9-பாடல்களையும்.
பிறகு தால் ஆட்டிப் பாருங்கள் குழந்தை உயரமாக மட்டும் இல்லை உன்னதமாகவும் வளர்வான்.

‘சீர் ஆர் பவழம் கால் முத்தம் கயிறாக
ஏர் ஆரும் பொற் பலகை ஏறி இனிது அமர்ந்து
நாரா யணன் அறியா நாண்மலர்த் தாள் நாய் அடியேற்கு
ஊராகத் தந்து அருளும் உத்தர கோச மங்கை
ஆரா அமுதின் அருள் தாள் இணை பாடி
போர் ஆர் வேற் கண் மடவீர் பொன் ஊசல் ஆடாமோ . . .?’

இதைவிட உன்னதமான தாலாட்டுப் பாடல் ( இத்தோடு பெரியாழ்வார் பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள்) வேறு ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். உங்களுக்கு எல்லாம் இதற்கு எங்கே நேரம்? தொலைக் காட்சிப் பெட்டியின் குத்தாட்டப் பாடலையே தால் ஆட்டாக்க் கொண்டு வளர்கின்றன தம் வருங்காலத் தலைமுறை என்றால், வேதனை வேதனை.
மங்கையர்கரசி

கோவிலுக்கு வாருங்கள், குருக்கள் சொல்லுவார் அம்பிகையாம் எங்கள்
மங்களேஸ்வரி பெருமையை. ஆனால் மங்கையர்கரசி பற்றிக் கூறுவாரா,
என்றால் அது இங்கே சம்பந்தம் இல்லை என்று விட்டு விடுவார். அது எப்படிச் சம்பந்தம் இல்லாது போகும்.சம்பந்தரோடு இல்லாத சம்பந்தமா, எம் மங்கையர்க் கரசிக்கு?
அரசி மங்கையர்க்கரசி சம்பந்தப் பெம்மானைத் தன் குழந்தையாகவே பாவித்தார்.சம்பந்தர் மேல் ஆறாத பாசம் கொண்டு, கொண்டு, அவர் திரு வருகைக்குக் காத்திருந்து காத்திருந்து, முதன் முதலாய் அவர் திருப் பொன் மேனி கண்ணுற்றபோது மங்கையர்க்கரசிக்கு நகில்கள் கனத்துச் சுரந்தனவாம் என்னில் அவர் பாசத்தை எப்படிச் சொல்ல?
எம் ஆளுடைப் பிள்ளையாம் பாலறாவாயர் திருஞான சம்பந்தரும் இலேசுப் பட்டவர் இல்லை. யாரையும் எளிதில் பாடிவிடமாட்டார். புறநானூற்றுப் புலவர்கள் வேண்டுமானால் அரசர்களைப் பாடலாம். நாயன் மார்கள் எம்மானை அன்றியோர் அரசப் பெம்மான் எவரையும் பாட மாட்டார்கள். அப்படிப் பட்ட சம்பந்தப் பெருமான் ஒரு குழந்தைக்கே உரிய உவகையோடு தாய் அன்பு பீறிட மங்கையர்க்கரசியைப் பாடுகிறார், மந்திரி குலச் சிறையைப் பாடுகிறார் என்றார் அவர்கள் பெருமையை நீங்களே உணர்ந்ந்து கொள்ளுங்கள்.

‘மங்கையர்கரசி வளவர்கோன் பாவை
வரித் தடக் கை மட மானி
பங்கயச் செல்வி பாண்டிமாதேவி
பணிசெய்து நாடொறும் பரவ
பொங்கழல் ஒருவன் பூத நாயகன்
நால் வேதமும் பொருந்தி
அங்கயற் கண்ணி தன்னொடும் அமர்ந்த
ஆலவாய் ஆவதும் இதுவே . . .’

இப்படிப் பத்துப் பாடல்களிலும் மங்கையர்க் கரசிக்கு எவ்வளவு பெரிய இடத்தைக் கொடுக்கிறார் பாருங்கள். இது எந்தப் பாண்டிய ராணியும் பெறாத இடம். குமரிக் கண்ட காலத்தில் இருந்து, கடைச்சங்க காலப் பாண்டியர் வழியாக்க பிற்காலப் பாண்டியர் காலம் வரை எங்கே உங்களால் எத்தனைப் பாண்டிமா தேவியரைப் பட்டியல் இடமுடியும்? ஏதோ தமிழ் அறிந்தவர்கள் வேண்டுமானால் பெருங்கோப் பெண்டு, கோப்பெருந் தேவி என்று சொல்ல்லாம், அப்புறம், அதற்கும் மேலே. முடியாது.

ஆகா, மங்கையர்க்கரசிக்கு எவ்வளவு உன்னதமான இடத்தை எம்
சம்பந்தர் கொடுத்திருக்கிறார். மனிதன் உள்ள வரை தேவாரம் இருக்கும் அதையும் தாண்டி ஒலியாக உலாவும். தேவாரம் இருக்கும் வரை மங்கையர்கரசியும் இருப்பார்..

அடியவர் பெருமையும் அடியார்க்கடியார் பெருமையும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. எம்பிரான் நடராசரோ அதற்கும் மேலே ஒருபடி சென்று விட்டார். அதுதான் இறைவன் தன்மை. அதுதான் இறைவன் குணம்.
அவனுக்கு தன் அடியார்களுக்குத் தொண்டு செய்யும் அடியார்கடியார்களைக் கண்டால் குதூகலம் சும்மா பிய்த்துக் கொள்ளும். அடியார்களுக்கு கிலோக் கணக்கில் அவன் அருள் கிட்டும் என்றால் அடியார்கடியார்களுக்கு ஏக டன கணக்கில் கிட்டும்.
திருத் தொண்டர்களுக்குத் தொண்டு செய்யும் போது இறைவன் மனம் குளிர்கிறது. அவன் அருளை வாரா வாரி வாரிதியாய் வழங்குகிறான்.

மங்கையர்க்கரசி சம்பந்தரின் தொண்டர் எனவே நடராசப் பெம்மான் மங்கையர்கரசிக்கு ஒரு உயர்ந்த ஸ்தானத்தைக் கொடுத்து, அவர் பிறப்பறுத்து
உத்திர கோச மங்கைப் பதியின் அம்பிகை எம் பிராட்டி மங்களேஸ்வரியின் அருகிலேயே மீண்டும் பிறவா வண்ணம் என்றும் எப்பொழுதும் இணைபிரியாத் தோழியாக வைத்துள்ளார் என்றால் என்னே மங்கையர்கரசி செய்த பாக்கியம்?
என்னே அவர் செய்த தொண்டர்க்குச் செய்த தொண்டின் மகிமை?

தலப் பெருமைகள்

1) சிதம்பரம் கோவிலுக்கு முன்பே தோன்றியது. எனவே உத்திர கோச
மங்கைக்கு ஆதி சிதம்பரம் என்ற ஒரு பேரும் உண்டு>

2) நடத்தரையர் இங்கு அறையில் ஆடிய பின்னர்தான சிதம்பரத்தில்
அம்பலத்தில் ஆடினார்

3) இது அம்பிகைக்கு பிரணவப் பொருள் உபதேசித்த இடம். ஓசம் என்றால்
இரகசியம். உத்தர என்றால் விடை. மங்கைக்கு உபதேசித்ததால் இது
உத்தர கோச மங்கை.
4) இங்குள்ள மங்களநாதர் கருவறையில் வடச் சுவற்றை ஒட்டிப்
பாணாசுரன் வழிபட்ட பாண லிங்கம் ஒன்று உள்ளது. பார்த்திருக்கிறேன்.
தனியாக அத்தாயமாக்க் கிடக்கும் உருண்டைக் கல் காலவெள்ளத்தில்
காணாமல் போகாமல் இருக்க வேண்டும்.

5) மணிவாசகரின் பாடல் பெற்ற தலம்.

6) மிகமிகத் தொன்மையானதும் இன்று வரை உயிருடன் உள்ளதும் பல
அருள் தலைமுறைகளையும் முனிவர்களையும் பார்த்த தல விருட்சம்
இலந்த மரம் உள்ள இடம்.

7) உலகிலேயே மாப் பெரிய மரகதக் கல் அதுவும் சிலை வடிவில், இன்னும்
சொல்லப் போனால் நடராசப் பெம்மானின் அருட்சீவ ஒளிசிந்த ஆடும் திருக்
காட்சி இங்குதான்.

8) வேதவியாசரும் பாராசரும் பூசித்த தலம்

9) உலகில் உள்ள 1087 சிவாலயங்களிலும் உள்ள அருட் சக்திகளைத்
தன்னகத்தே கொண்டு விளங்கும் சகஸ்ர லிங்கம்.

10) திருவிளையாடற் புராணத்தில் வரும் வலைவீசி மீன் பிடித்த படலம்
இக் கோவில் வாயிலில் நிகழ்ந்தது.

11) மணிவாசக வள்ளலுக்குச் சுத்த பிரணவ ஞான தேகம் கிடைத்த இடம்
இன்றளவும் ஒளி உருவில் அவர் அமர்ந்துள்ள இடம்.
மற்ற கொவில்களில் எல்லாம் மணி வாசகரின் திருமேனித் துறவு
நிலையில் மழித்த தலையோடு வடிக்கப் பட்டிருக்கும். இங்கே அவருக்குத்
தனிச் சன்னிதியே உண்டு,அதுவும் தவழும் சடாமுடிளோடு கன கம்பீரமாய்.
12) விழா இல்லாத ஊரா, ஆண்டுக்கு இரண்டு உண்டு. ஒன்று சித்திரைத்
திருவிழா, இன்னொன்று மார்கழித் திருவாதிரைத் திருவிழா

13) இக்கோவிலில் குடிகொண்டு அருள் பாலிக்கும் முருகப் பெம்மானின் மீது
அருணகிரிநாதர் கூட ஒரு திருப் புகழ் பாடி உள்ளார்.
தில்லையும் உத்திரகோசமங்கையும்

தில்லை என்பது சிதம்பரம். உத்திர கோசமங்கையோ ஆதி சிதம்பரம்.

ஆதிசிதம்பரத்தில் நடத்தரையர் திருமேனி தாபிக்கப் பட்ட அடுத்த நாள்
தில்லையிலும் அது தாபிக்கப் பட்டது. இது இரண்டையும் செய்தவர்
சண்முக வடிவேலர்.

இங்குள்ள இரண்டு நடராசர் சிலைகளும்தான் மூலச் சிலைகள்.
மற்ற மற்ற கோவில்களில் இந்த இரண்டையும் பார்த்துத்தான் நடராசர்
சிலைகள் வடிவமைக்கப் பட்டன.

இந்த இரண்டு சிலைகளுக்கும் கழுத்திலோ இடுப்பிலோ பாம்பு கிடையாது;
தலையில் கங்கை கிடையாது; அரையில் புலித் தோலும் கிடையாது.
இரண்டுமே இராஜ கோலம்.

தில்லையில் உள்ளது ஐம்பொன். இங்கோ இது பச்சை மரகதம்..

இரண்டு இடத்திலும் நடராசர் சன்னதிக்கு எதிரில் வலப்புறத்தே பெருமாள் சன்னிதி உள்ளது. ஒரே வேறுபாடு தில்லையில் இற்றைக்கும் பெருமாளுக்கு
வழிபாடு உண்டு(திருச்சித்ரக் கூடம்) . ஆனால் உத்திர மங்கையில் அது என்ன காரணத்தாலோ அல்லது பிணக்காலோ இன்றளவும் மூடப் பட்டுக் கிடக்கிறது. மூடி மறைத்து அதன் மேல் உமா மகேச்வர்ர் சிலையும் மணி மாடமும் உள்ளது.

இரண்டுமே மணிவாசகரால் பாடல் பெற்ற தலங்கள்.

18 Comments »

  1. 1

    there is no language to express my expressions, one thing is diffenet that we are living in Diviya Shethrem(Poniys boomi),
    thanks for the presious information about Hindusim
    narasimhan s

  2. 3
    srinivasan Says:

    Really it’s all very interesting… and very useful for me as i’m from ramanathapuram

  3. 5
    Sundar Says:

    சமீபத்தில் நான் இந்த கோவிலுக்கு சென்றேன். அந்த நேரத்தில் எனக்கு இந்த கோவில் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இந்த கட்டுரையை படித்த பிறகு, கண்ணீர் தானாகவே வெளியே வந்தன. … .
    இந்த கட்டுரை மிகவும் நன்றாக இருந்தது .. உங்கள் அற்புதமான கடவுள் சேவைக்கு நன்றி

    கடவுள் ஆசி உங்களுக்கு இருக்கட்டும்.. தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவருக்கும் இறைவா போற்றி
    ஓம் நம சிவாய

  4. 7
    Manoharan Vaikundampillai Says:

    I am proud to say, Thiru uthira kosa mangai is my birth place. Your’s Sethu Boomi website recalls my childhood rememberances. It was a first hand informaion for me, that my native place was surrounded by Sea, But it is true that Teppakkulam in and outside of the temple’s water is salty in nature and the fishes were of sea kind -fishes.

    Thanks Lot.

    V.Manoharan.

  5. 8
    chandramouli Says:

    i thank you so
    much that u have done wonderful job

  6. 9
    chandramouli Says:

    can u plz send the evidence of all these.
    nanbare nan therintu kondal ippiravi payan peruven.
    i dont have words to express myself.great job done by you.pls send the evidence what you have to my mail i will be the happiest person to read and tell people regarding that.
    thank you

  7. 10
    rajasekar Says:

    please let us know the margazhi date thiis year 2012 for the function thiruvathirai

  8. 13
    S.Silvanius Roosevelt Says:

    Meenavan mattum meen pidithal pattri sollum tamil varalaru athu Barathar than enrum urakka solla vendum.

  9. 14
    S.Silvanius Roosevelt Says:

    Bharathar ,Paravar erandumey onruthan Thola……

  10. 15

    Apprriciate your explation and way of expression. Please read again and try to remove spelling mistakes.

  11. 16

    மிகவும் அருமையான கோவில் , இந்த கோவிலில் ஒரு கல்தேர் ஓன்று உள்ளது , அதன் சக்கரமும் கல்லால் ஆனது , தல விருட்ச மரத்தின் 3000 ஆண்டுகள் , மரகத நடராசர் , பள்ளியறை ,இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இந்த கோவிலின் பெருமையை , இன்னும் அணைத்து மக்களுக்கும் எடுத்துரைத்தால் தமிழனின் வரலாறு புத்துயிர் ஊட்ட பெரும்

  12. 18
    Paravan(paravar) Says:

    அது மட்டுமா, அவன் பரதவ வீரனாய் வேடம் தரித்ச்
    சுறா மீனைக் கடலில் வலைவீசி அடக்கிய தலம்!
    ஆகவே வலைஸ்தலம் என்று சொன்னது சரிதானே …!

    Paravar community from rameswaram,use to shout as this during their marraige ceremony”Hail you the king who ruled Uttrokosamangai” “Hail you the king who ruled Ayodhya” “உத்ரகோசமங்ைகயில் அரசாண்ட மன்னன் பரேபக்”


RSS Feed for this entry

பின்னூட்டமொன்றை இடுக